×

நீண்ட இழுபறிக்கு பின் பாஜ அறிவிப்பு சட்டீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு: பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பழங்குடியின தலைவர் விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்குப் பின் பாஜ நேற்று அறிவித்தது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரசும், மிசோரமில் சோரம் மக்கள் இயக்கமும், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கரில் பாஜவும் வெற்றி பெற்றன. இதில் தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் முதல்வராக அறிவித்து, அவர் பதவியேற்றுள்ளார். மிசோரமில் லால்துஹோமா முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரமாகியும் மற்ற 3 மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்ய முடியாமல் பாஜவில் குழப்பம் நீடித்தது. இம்மூன்று மாநிலங்களிலும் முதல்வரை தேர்வு செய்ய பாஜ மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். முதல்கட்டமாக சட்டீஸ்கர் மாநிலத்திற்கான மேலிட பார்வையாளர்கள் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவால் மற்றும் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் முன்னிலையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது.

இதில் வெற்றி பெற்ற கட்சியின் 54 புதிய எம்எல்ஏக்களும், கட்சியின் மாநில பொறுப்பாளர் ஓம் மாத்தூர், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணை பொறுப்பாளர் நிதின் நபின் ஆகியோரும் பங்கேற்றனர். முதல்வர் பதவிக்கு, ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரேணுகா சிங், மாநில பாஜ தலைவர் அருண் சாவோ போன்றோர் போட்டியில் இருந்த நிலையில், அனைத்து எம்எல்ஏக்களின் ஒப்புதலுடன் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டார். இவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர். சட்டீஸ்கரின் முதல் பழங்குடியின முதல்வர் விஷ்ணு தேவ் சாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள பாகியா எனும் குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த விஷ்ணு தேவ் சாய் 11ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

1990ல் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வாகி அரசியலில் நுழைந்தார். 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவர் 1999, 2004, 2009 மற்றும் 2014ல் தொடர்ச்சியாக 4 முறை ராய்கர் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய எஃகு மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சராக சாய் பதவி வகித்தார்.
முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்த சாய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க நேற்று உரிமை கோரினார். அவர் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்பார் என கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை பொறுத்து பதவியேற்பு தேதி முடிவு செய்யப்படும் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டீஸ்கரைத் தொடர்ந்து மத்தியபிரதேசத்தில் இன்று முதல்வர் தேர்வு நடைபெற உள்ளது.

 

The post நீண்ட இழுபறிக்கு பின் பாஜ அறிவிப்பு சட்டீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு: பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vishnu Dev Sai ,Chief Minister ,Chhattisgarh ,Raipur ,Dinakaran ,
× RELATED ஹரியானா பாஜக முதல்வர் விலக துஷ்யந்த் வலியுறுத்தல்